நத்தம்: நத்தம் சிறுகுடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.
நத்தம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் எட்டு நாட்கள் பங்குனிதிருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் நேற்று இரவு வாண வேடிக்கைகள் உடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக ஆரத்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு அம்மன் நகர்வலகமாக சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாலம்மனனை தரிசனம் செய்தனர். விழாவில் ஆரத்தி எடுத்தல், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.