பதிவு செய்த நாள்
24
மார்
2022
12:03
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 5 ல் அனுக்கையுடன் துவங்குகிறது.
ஏப்., 6 அன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டவுள்ளது. மாலை சிம்மாசனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வருவர். தொடர்ந்து சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்மன் சிம்ம, நந்தி, கிளி, குண்டோதரன், கைலாச கற்பக விருஷம், அன்னம், ராவண கைலாசம், காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் காலை, மாலை வீதிவலம் நடக்கிறது. மேலும் ஏப்., 12 காலை நடராஜர் புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் திக்விஜயம் நடக்கும். மறுநாள் விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலமும், மாலையில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மேலும் ஏப்., 14 காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்து, இரவு யானை, பூப்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் நடக்கிறது. மறுநாள் 9:45 மணிக்கு மேல் சித்திரை தேரோட்டம், இரவு ரிஷப வாகனத்தில் வீதி வலம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஏப்., 16 காலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.