பதிவு செய்த நாள்
19
ஜூலை
2012
10:07
ஆடி அமாவாசையை முன்னிட்டு, காவிரிக் கரையோரப் புனிதத் தலங்களில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். எனினும், காவிரியில் நீரோட்டமின்றி, பக்தர்கள் கடும் சிரமமடைந்தனர்.ஆடி அமாவாசையின் போது, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, நீர் நிலைகளில் பக்தர்கள் குவிவது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில், காவிரி, பவானி, அமுதநதி ஆகியவை சங்கமிக்கும், பவானி கூடுதுறையில், நேற்று அதிகாலை, 4 மணி முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காவிரியில் புனித நீராடி, தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, பிண்டம் விடுதல், தோஷ பரிகாரங்கள் நிவர்த்தி போன்றவற்றை மேற்கொண்டனர். இவற்றை செய்விக்க ஏராளமான அந்தணர்களும் குவிந்தனர். வழக்கமாக ஆடி மாதம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரியாற்றின் இரு கரை தொட்டு தண்ணீர் செல்லும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்படவில்லை.மேட்டூர் அணைக்கு அடுத்துள்ள பெரிய நகரான பவானியிலேயே, காவிரியாற்றில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்ததாலும், தர்ப்பணப் பொருட்களான, எள், பிண்ட மாவு, பூக்கள், வாழைக்கன்று, வாழை இலை போன்றவற்றை தண்ணீரில் சேர்ப்பித்ததாலும், தண்ணீர் பெரிதும் மாசுபட்டது.நீரோட்டமில்லாததால், பக்தர்கள் குளிக்கும் இடத்திலேயே பூஜை பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன; பக்தர்கள், வேறு வழியின்றி அதிலேயே குளித்தனர்.