பதிவு செய்த நாள்
19
ஜூலை
2012
10:07
உடுமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆடி அமாவாசையை முன்னிட்டு, உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை 4.30க்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மாலையில் இருந்தே, விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திருமூர்த்திமலையில் குவியத் துவங்கினர்; நேற்று அதிகாலை முதல், பஸ்கள் மற்றும் வாகனங்களில் வந்த திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில், திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். அரசுப் போக்குவரத்து சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்தப்பட்டன. பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.