பதிவு செய்த நாள்
29
மார்
2022
02:03
உடுமலை: கோவில்கள் வருவாயை உயர்த்த, கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்களின் வாடகை மற்றும் குத்தகைத் தொகையை, ஜூலை முதல் உயர்த்த ஹிந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள், பராமரிக்க முடியாத நிலையில் உள்ளன. சில கோவில்களில், ஒரு வேளை பூஜை கூட மேற்கொளள முடியாத நிலை ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த நிலங்கள், ஆக்கிரமிப்பின் பிடியிலும், முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டும் உள்ளன. இவற்றை கண்டறிந்து மீட்க வேண்டும் என, பக்தர்களும், பொதுநல ஆர்வலர்களும் நீண்ட காலமாக, ஹிந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இவற்றை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஏற்கனவே கோவில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலங்களில் கடைகள் கட்டப்பட்டும், நிலங்களாகவும் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கடை, மற்றும் நிலங்களின் வாடகை, குத்தகை தொகை உள்ளிட்டவை, ஆன்லைன் வாயிலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.கோவில் நிலங்கள் என்பதால், குறைந்த அளவு கட்டணங்களே பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூலை மாதம் முதல் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது. நில மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால், நிலங்கள் மீட்கப்பட்டதும் வாடகை மற்றும் குத்தகையின் கீழ் அவை கொண்டுவரப்பட்டு துறையின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக, கோவில்களில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள முடியும். இவ்வாறு, கூறினார்.