நமது வாழ்க்கை பல நேரங்களில் பயத்தில்தான் கரைகிறது. ஒருவர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார் என்றால் அவர் நம்பிக்கை இல்லாதவர் என்றுதான் அர்த்தம். அப்துல் என்ற சிறுவன் நதியை கடந்து மறுகரைக்கு செல்ல, படகில் சிலருடன் பயணித்துக் கொண்டிருந்தான். திடீரென வெள்ளம் கரை புரண்டு ஓடியதால், படகு பேயாட்டம் ஆடியது. அனைவரது மனமும் பயத்தில் பயணித்தது. அப்துல் மட்டும் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தான். இதைப்பார்த்த ஒருவர், ‘‘என்னப்பா.. நீ ஏன் பேசாமல் இருக்கிறாய். பயத்தில் பேச்சு வரலயா..’’ என கேட்டார். ‘‘ஐயா.. நான் பயப்படவில்லை. இந்த வெள்ளம் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் படகோட்டி என் அப்பா என்பதால் அவர் மீது நம்பிக்கை உள்ளது’’ என்று சிரித்தான் அப்துல். இதை வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கலாம். நமக்கு பயம் ஏற்படுகிறது. உடனே இறைவனிடம் கையேந்துகிறோம். இது தவறான விஷயம். எப்படிப்பட்ட சோதனையிலும் இறைவன் நம்மை காப்பாற்றுவான் என்று நம்புங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்.