பதிவு செய்த நாள்
26
மார்
2022
02:03
1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.
2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது.
3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.
4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.
5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்து வருகிறது.
6. தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள்.
7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள்.
8. ராமேசுவரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சேதுபதி மன்னர்களை கவுரவிக்கும் வகையில் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேசுவரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
9. ராமேசுவரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள், ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலினை அடுத்த பரந்த வெளிகளில் ராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்று வந்தன. இப்போது அந்த வழக்கம் இல்லை.
11. ராமேசுவரம் கோவிலின் மண்டபங்கள், சன்னநிதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடிகள் நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
12.செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப்பட்டுள்ளது.
13. இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகின்றது.
14.மூன்றாம் பிரகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன.
15.அனுப்புமண்டபம், சுக்கிர வார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது.
16.கோவிலில் உள்ள உலோகத்தினால் செய்யப் பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக கலைத்திறன் மிக்கதாக காணப்படுகிறது.
17.ராமநாதர் கோவிலிலிருந்து 1903,1905,1915 -ம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களை படியெடுத்து பதிவு செய்துள்ளனர்.
18.அம்பிகை சன்னதியில் உள்ள தூண் ஒன்றின்மீது ``இரணிய கர்ப்பயாஜிவிஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர் என்ற பொறிக்கப்பட்டுள்ளது.
19.முதல் பிரகாரத்திலிருந்து வெளிவரும் வாயிலில் உள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒருகல்வெட்டில் சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்ற பெருந்துறவி அழிந்து போன பிரகாரத்தை கட்டினார் என்ற கூறப்படுகின்றது.
20.பள்ளியறையில் உள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகு நாத சேதுபதிகட்டதேவரால் அளிக்கப்பட்டது என்றும் வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
21.முதற்பிரகாரத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டில் சகம்1545 (கி.பி.1623) ஆம் ஆண்டில் நடமாளிகை மண்டபம்,அர்த்த மண்டபம் இவற்றை உடையான் சேதுபதி கட்டத்தேவர் மகன் கூத்தன் சேதுபதிகட்டத்தேவர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது.
22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கோபதிப்பர் சகம் 1390 (கி.பி.1468) ஆம் ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
23.ராமநாதர் கருவறை நுழைவாயிலில்உள்ள கன்னடக் கல்வெட்டு ஒன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதை கூறுகின்றது.
24.தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.