திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் சன்னதி வீதி புறப்பாடு நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை 5:45 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணிக்கு நித்திய பூஜை, திருவாராதனம். 8:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி சன்னதி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளி, விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்து 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.