மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து விரைவில் நீர் திறக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2022 04:04
ஆண்டிபட்டி: மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக அடுத்த வாரம் நீர் திறப்புக்கான வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் 70.11அடி வரை உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. இருப்பில் இருந்த நீர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி வீதம் வெளியேறுவதால் அணை நீர்மட்டம் மெதுவாக குறைகிறது. நேற்று அணை நீர்மட்டம் 68.85 அடியாக இருந்தது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழா அடுத்த வாரம் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 16ல் நடக்க உள்ளது. வைகை அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டால் தான் குறிப்பிட்ட நாளில் மதுரை சென்றடையும். வைகை அணையிலிருந்து நீர் திறப்புக்கான நாள், நீர் திறப்பின் அளவு குறித்து அரசின் அனுமதி பெறும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.