பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
03:04
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர்.உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மக்கள் நேற்று முதல், ரம்ஜான் நோன்பை துவக்கினர். ரம்ஜான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். முதல் நாளான நேற்று இரவு, பிறை பார்த்து சிறப்பு தொழுகை நடந்தது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. சிறுவர்கள் முதல் முதியோர் வரையில், அனைத்து வயதினரும், தொழுகையில் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு, பெரிய பள்ளிவாசலில், சுன்னத் ஜமாத் தக்னி ஜாமியா மஸ்ஜித், முத்தவல்லி ஹாஜி ஜனாப் ஜாஹிர் உசேன் தலைமையில் தொழுகை நடந்தது. செயலாளர் ஹாஜி ஜனாப் அன்வர் பாஷா, பொருளாளர் ஜனாப் முஸ்தாக் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தவல்லி ஹாஜி ஜனாப் ஜாஹிர் உசேன், 70, கூறியதாவது:நோன்பு வைத்திருப்பவர்கள் அதிகாலை, 4:00 மணிக்கு (ஸஹார்) உணவு உட்கொண்டு, மாலை, 5:15 வரையில், குடிநீர் கூட அருந்தாமல் கடுமையான விரதத்தை கடைபிடிக்கின்றனர். அதிகாலையில் நோன்பு வைப்போருக்கு உணவு வழங்க, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், பல ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.
மாலையில் தொழுகைக்கு வருவோருக்கு, பச்சரிசி, காய்கறிகள் அடங்கிய கஞ்சி, புதினா சட்னி மற்றும் பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன. ஐந்து கடமைகளுள் ஒன்றான, நோன்பு வைப்பதால், ஒருவர் பல நன்மைகளை அடைகின்றனர்.மருத்துவ ரீதியில் பார்த்தால், உடல் உறுப்புகளுக்கு பல மணி நேரம் ஓய்வு கொடுத்து, பின் ஆரோக்கிய உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் நிலை சரியில்லாதோர், முதியோர் என, நோன்பு வைக்க முடியாதோர், தானம் வழங்குவது வாயிலாக நன்மைகளை பெறுகின்றனர். இந்தாண்டு, தமிழக அரசு, பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசியின் அளவை குறைத்துள்ளனர். ஏற்கனவே வழங்கிய அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.
வால்பாறை: ரம்ஜான் மாதத்தில் தான் குர்ஆன் எனும் வேதம் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது. ரம்ஜான் நோன்பின் முதல் நாளான நேற்று, வால்பாறை புதுமார்க்கெட்டில் உள்ள பள்ளிவாசலில் மாலை, 6:37 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.முன்னதாக பள்ளிவாசலில் இஸ்லாமியருக்கு இப்தார் விருந்து (நோன்பு கஞ்சி) வழங்கப்பட்டது. வால்பாறையை சுற்றியுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.வால்பாறையில் மூத்த இஸ்லாமியர் சையது இப்ராஹிம் கூறுகையில், ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது அவசியம். இன்னல்களை போக்க, இறைவனை நாள்தோறும் ஐந்து முறை தொழுக வேண்டும். இறைவன் அருள் பெற நோன்பு கஞ்சி குடிப்பது அவசியம். இந்த புனித மாதத்தில் இறைவனில் அருள் பெற வேண்டுமெனில் நோன்பு இருப்பது அவசியம், என்றார்.
உடுமலை: ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமியர்கள், இறைவனின் அருள் பெற நோன்பு இருக்கின்றனர். நேற்று மாலை, ரம்ஜான் நோன்பு துவக்கும் நிகழ்ச்சி, உடுமலை பூர்வீக பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில், சிறப்பு தொழுகையுடன் துவங்கியது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ரம்ஜான் நோன்பு குறித்து பூர்வீக பள்ளிவாசல் பேஷ் இமார் சையித் ஈசா பைஜி கூறியதாவது:ஒவ்வொரு வினாடியும் இறைவனை மறவாமல் நினைக்க, ரம்ஜான் நோன்பு உதவுகிறது. நோன்பு காலத்தில், தாகமும், பசியும் ஏற்படும் போதெல்லாம், இறைவனை நினைக்கிறோம்; அவர் காட்டிய வழியை பின்பற்றுகிறோம். இத்தகைய நோன்பு மனிதர்களுக்கு இறை அச்சத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும்.எல்லா காரியங்களும் சீராக நடக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க ரம்ஜான் மாதத்துக்கும், நோன்புக்கும் உள்ளது. கடந்த, 52 ஆண்டுகளாக, ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகிறேன். இவ்வாறு, தெரிவித்தார்.
- நிருபர் குழு -