பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
03:04
மயிலாப்பூர் : மயிலாப்பூர் கோவில் மயில் சிலை மாயம்; விசாரிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் உண்மை கண்டறியும் குழு நியமித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
தேடும் பணிமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னிதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, 2018ல் வழக்குப் பதிவு செய்தது. விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, துறை ரீதியிலான உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை, ஆறு வாரங்களுக்குள் முடிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையில், மயிலாப்பூர் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி, அதை கண்டுபிடிக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அவகாசம்: இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, சிலையை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. அதை கண்டுபிடிக்க முடியாவிட்டால், நான்கு மாதங்களில் புதிய சிலை நிறுவப்படும், என்றார். அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் தாக்கல் செய்த அறிக்கையில், ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஆறு வார அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கின் விசாரணையையும், உண்மை கண்டறியும் விசாரணையையும் விரைந்து முடிக்கும்படி, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்தது.