மாவூற்று வேலப்பர் கோயில் விழா முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 04:04
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் செயல் அலுவலர் நதியா கூறியதாவது: ஏப்ரல் 14ல் விழா என்றாலும் முதல் நாள் இரவே நூற்றுக்கணக்கானவர்கள் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி விடுவர். ஆண்டிப்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கான தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வற்றாத சுனையில் குறைந்த அளவே நீர் வருவதால் அருகில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படும் நீரை பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படுத்துவர். வாகனங்கள், பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு வந்து செல்ல போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து திட்டமிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.