தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சித்திரை தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் தகப்பனுக்கு பாடம் கூறிய கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரைத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2018 ம் ஆண்டுக்கு பிறகு சித்திரை தேர் சிதிலமடைந்ததால் புதிய தேர் செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில் நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பில் 13.25 அடி உயரமும், 13.25 அடி அகலமும், 20 டன்னில் தேரும், 3 டன்னில் 4 சக்கரம் மற்றும் 2 தேரின் அச்சு என 23 டன் எடையில் இலுப்பை மரத்தினால் தயாரிக்கப்பட்டது. தேரிம் பணிகள் முழுவதும் முடிவடைந்தை முன்னிட்டு இன்று(06 ம் தேதி)வெள்ளோட்டம் நடைபெற்றது. தேரின் மேலே தேரினை தயாரித்த காரைக்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி அமர்ந்து வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை மாத திருவிழா தொடங்குவதை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.