பதிவு செய்த நாள்
06
ஏப்
2022
04:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் முன் அறிவிப்பு இல்லாமல் மூன்று மணி நேரம் மூடியதால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பொது வழி மற்றும், விரைவு தரிசனத்திற்கு, 25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்கள் வாயிலாக சென்று மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று, செவ்வாய்கிழமை மற்றும் கிருத்திகை விழா என்பதால் அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.காலை 7:00 மணி முதல், மூன்று மணி நேரம் முன் அறிவிப்பு இல்லாமல், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் பூட்டு போட்டு மூடப்பட்டது.
சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று விரைவு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கவுன்டர் முன் குவிந்தனர். மேலும், மாற்றுத்திறனாளி பக்தர்களும் அங்கு வந்தனர்.இதனால் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இணை ஆணையர் உத்தரவின்படி, மூன்று மணி நேரத்திற்கு பின், டிக்கெட் கவுன்டர் திறந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், செவ்வாய்கிழமைகளில் உள்ளூர் பக்தர்கள் அனைவரும் இவ்வழியாக இலவசமாக செல்கிறார்கள் என்பதற்காக சிறிது நேரம் மூடினோம், என்றார்.