சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். ?அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.