ஜம்மு-காஷ்மீரில் அமைந்து உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு, புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது.
ஜம்மு - காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவில், உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவலால் ரத்தான அமர்நாத் புனித யாத்திரைக்கு, இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, புனித பயணம் ஜூன் 30ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
43 நாட்களுக்கு நடக்கும் இந்த யாத்திரைக்கான முன்பதிவு நேற்று துவங்கி உள்ளது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் இருந்து, குகைக்கோவிலுக்கு 48 கி.மீ., பயணிக்க வேண்டும். புனித யாத்திரை முன்பதிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:புனித பயணம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, வழியில் ரேடியோ அலைவரிசை கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பயணத்தில், 75 வயதிற்கு மேற்பட்டோர், 7 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் ஆறு மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.