பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
07:04
சென்னை: சென்னை தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க சென்னை, புறநகரில் இருந்து, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன, என திருமலை திருப்பதி தேவஸ்தான, தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், இன்று மாலை சென்னை தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. வைபவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அமைச்சர்களின் ஆலோசனை கூட்டமும் நடந்தது. மாநகராட்சி, குடிநீர்வாரியம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறையினரும், வைபவத்திற்கு தேவையான நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில், திருக்கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில், 14 ஆண்டுகளுக்கு பின், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடக்க உள்ளது. இதற்காக அனைத்து துறைகளும் உதவி செய்யும் படி திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் உத்தரவு படி அனைத்து துறையினரும் மிகவும் ஆர்வத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வைபவத்தில் ஒரு லட்சத்திற்குமேல் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வாகனங்கள் நுழைவாயில் எண் 9, மன்றோ சிலை அருகில், 3,000 கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.வி.ஐ.பி.,க்களுக்கு, 6,8 நுழைவாயில் உள்ளது. அவர்களின் வாகனங்கள் தலைமைச் செயலகம், கடற்கரையில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. நுழைவாயில், 3ல் பத்திரிக்கையாளர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்படுவர். மேடை பின்புறம் வாகன நிறுத்துமிடம் உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு நுழைவாயில் எண், 6ல் சிறப்பு வழி உள்ளது.பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 3,000 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரங்கத்தை சுற்றிலும், 15 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட உள்ளன. இரண்டு மருத்துவ மையமும் அமைக்கப்படுகிறது. சென்னை, புறநகரில் இருந்து, 500 மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகை தரும் அனைவருக்கும் திருமலை லட்டு பிரசாதம், ஆப்பிள், குடிநீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகின்றன.மாலை, 5:00 மணிக்கு துவங்கும் இந்த உற்சவத்தில், வேதம் படிக்கப்படுகிறது.அதன் பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர் இருக்கும் இடத்தில் அருள்பாலிப்பார். அங்கு ஆரத்தி காண்பிக்கப்படும். அதன் பின் கோவில் சம்பிரதாயங்கள் நடக்கும். இரவு, 7:00 மணி முதல், 9:00 மணிவரை திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நேற்று மாலை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திருக்கல்யாண அரங்கினை நேரில் பார்வையிட்டு, உரிய ஆலோசனைகளை வழங்கினார்.