நடமாடும் தெய்வமான காஞ்சி மஹாபெரியவருக்கு தொண்டராக பணிபுரிந்தவர் வாலாஜாபேட்டை சுந்தரமூர்த்தி. அவரது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை இங்கு பார்க்கலாம். ஒருமுறை ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் முகாமிட்டு இருந்தார் மஹாபெரியவர். ஒருநாள் நள்ளிரவு 2:00 மணிக்கு எழுந்த பெரியவர் பல் துலக்கி விட்டு ஜபம் செய்ய தொடங்கினார். அப்போது மற்ற தொண்டர்கள் உறங்கிக் கொண்டிருக்க, சுந்தரமூர்த்தி மட்டும் விழித்திருந்து பெரியவரை கவனித்துக் கொண்டார். அரை மணி நேரம் ஜபத்தில் ஈடுபட்ட மஹாபெரியவர் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு முகாமை விட்டுக் கிளம்பினார். அருகிலுள்ள குளத்திற்கு நீராடச் செல்கிறாரோ எனக் கருதி அரிக்கன் விளக்குடன் புறப்பட்டார். ஆனால் குளத்திற்குச் செல்லாமல் சற்று தொலைவில் உள்ள சிவன் கோயிலை நோக்கிச் சென்றார். வழியில் குறுக்கிடும் ஓடையைக் கடந்து கரையில் உள்ள சிவன் கோயில் வாசலில் அமர்ந்தார். ஆளே இல்லாத இப்பகுதியில் இருட்டில் ஏன் அமர்ந்துள்ளார் என்பதும் புரியவில்லை. தான் அமர்ந்த இடத்திற்கு எதிரில் தரையை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார். அப்போது ஒரு கார் எதிரில் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. அதில் எம்.ஜி.ஆர், எழுத்தாளர் மணியன் இருவரும் வந்திறங்கினர். பெரியவரை வணங்கினர். மகானுடன் தனியாகப் பேச வேண்டும் என அவர்கள் தெரிவிக்கவே, அருகில் நின்ற சுந்தரமூர்த்தியை சற்று தள்ளிச் செல்லும்படி உத்தரவிட்டார் பெரியவர். சிறிது நேரம் பேசி விட்டு புறப்பட்ட எம்.ஜி.ஆரும், மணியனும் விழுந்து வணங்கினர். அப்போது எம்.ஜி.ஆர், ‘தனக்கு தைரியம், நற்செயல்களை முடிக்கும் ஆற்றலை மஹாபெரியவர் அருள்புரிய வேண்டும்’ என வேண்டினார். பெரியவர் உத்தரவிடும் விஷயங்களைச் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘நீ இப்போது செய்வதே திருப்தியளிக்கிறது. உன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு நல்லதைச் செய்’ என்று சொல்லி பிரசாதம் அளித்தார் மஹாபெரியவர். அதற்குள் விடிய ஆரம்பித்தது. அதற்குள் எம்.ஜி.ஆர். வந்த விஷயம் ஊருக்குள் பரவவே கூட்டம் வர ஆரம்பித்தது. அங்கிருந்தவர்களுக்கு. பணம் கொடுத்து விட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.
‘‘ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) சென்னையில் இருந்து என்னை பார்க்க வரும் விஷயம் ஊருக்குள் தெரிந்தால் கூட்டம் கூடி விடும். நானும் ஊருக்குள் இருந்தால் சரிப்படாது என்று கருதியே இங்கு வந்து விட்டேன். ஆனாலும் மக்கள் கூடி விட்டார்களே’’ என்று சொல்லியபடி ஊரை நோக்கி நடந்தார். அவருடன் வந்த சுந்தர மூர்த்திக்கோ ஆச்சரியம் மேலிட்டது. சென்னையில் இருக்கும் எம்.ஜி.ஆர் தன்னை தரிசிக்க வருகிறார் என்பது கலவையில் இருந்த மஹாபெரியவருக்கு எப்படித் தெரிந்தது என யோசித்தபடியே பின்தொடர்ந்தார். இதே போலவே இன்னொரு விஷயமும் நடந்தது. ஒருமுறை பொங்கல் அன்று காஞ்சிபுரத்திலுள்ள சத்திரம் ஒன்றில் தங்கியிருந்த பெரியவர் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார். தொண்டர்களும் அவருடன் புறப்பட்டனர். அப்போது அவர் தங்கியிருந்த இடத்தை சுந்தரமூர்த்தி சுத்தம் செய்யத் தொடங்கினார். அங்கு சில துளசி மணிகள் சிதறிக் கிடந்தன. அவற்றை எடுத்து வைத்த போது பெரியவர் நினைவாக ஒரு துளசிமணியை எடுத்து தன் கைவசம் வைத்துக்கொண்டார். இதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று தேனம்பாக்கம் சென்றார் மஹாபெரியவர். அங்கிருந்த தொண்டர் ஒருவரிடம், ‘நான் வைத்திருந்த துளசி மணிகளில் ஒன்றை மட்டும் சுந்தர மூர்த்தி வைத்திருக்கிறான். அதை அவனிடம் இருந்து வாங்கி வா’ என உத்தரவிட்டார். இதைக் கேட்டதும் சுந்தரமூர்த்திக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மஹாபெரியவரின் ஞான திருஷ்டியை அறிந்து வியப்பில் ஆழ்ந்தார்.