திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; பல மணிநேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2025 03:12
திருப்பதி, ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களிடம் கருத்து கேட்பு: லட்டுகளின் தரம் மற்றும் வழங்கப்பட்ட வசதிகள் குறித்து பக்தர்களிடம் தலைவர் நேரில் கருத்து கேட்டறிந்தார். திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு வியாழக்கிழமை காலை திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு விற்பனை மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, அவர் பக்தர்களுடன் சேர்ந்து நேரில் கவுண்டருக்குச் சென்று, லட்டு விநியோக செயல்முறை, ஊழியர்களின் செயல்பாடு மற்றும் லட்டுகளின் எடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், தரிசனம் செய்யாத பக்தர்கள் ஆதார் பதிவு மூலம் கியோஸ்க் இயந்திரத்தில் யுபிஐ கட்டணம் செலுத்தி லட்டுகளைப் பெறும் செயல்முறையை அவர் ஆய்வு செய்து, அவர்களிடம் கருத்து கேட்டறிந்தார். அதன் பிறகு, அவர் பூந்தி தயாரிக்கும் பகுதிக்குச் சென்று, பூந்தி தயாரிக்கும் செயல்முறையை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினார்.
தொடந்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறவுள்ள வைகுண்ட துவார தரிசனத்திற்காக செய்யப்படும் ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யும் ஒரு பகுதியாக லட்டு விற்பனை மையத்தை ஆய்வு செய்தேன். தற்போது தினமும் 4 லட்சம் லட்டுகளையும், 8,000 கல்யாணோற்சவ லட்டுகளையும் பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. வைகுண்ட துவார தரிசனக் காலத்தில் லட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.