பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், 26ம் ஆண்டு தேர்த் திருவிழாவில், நேற்று காலை, சின்னம்மன், பெரியம்மன் கோவிலில், கிராம தேவதை வழிபாடு நடந்தது. இரவு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி கோவிலில் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 9 : 30 மணிக்கு கொடிக்கம்பத்தில் நந்தி பகவான் உருவம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் மன்னீஸ்வரப் பெருமானுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா, முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 30ம் தேதி வரை, தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.