உத்தர்காண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் பகுதிக்கருகே உள்ளது யோகத்யான் பத்ரி. இங்கு உள்ளது பாண்டுகேஷ்வர் கோயில். பாண்டு இங்கு அமர்ந்து தவம் செய்தான். இதே பகுதியில்தான் மான்வடிவில் உலவிய முனிவரையும் அவர் மனைவியையும் கொன்று சாபத்தை வாங்கிக் கொண்டான். இங்குள்ள திருமால் சிலையை நிறுவியது மன்னன் பாண்டு என்கின்றனர். ஜோஷி மடத்திலிருந்து 18 கி.மீ., துாரத்திலும், பத்ரிநாத்திலிருந்து 23 கி.மீ., தூரத்திலும் உள்ளது இக்கோயில். ஒன்பதாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட அழகான கற்கோயில் இது. திருமால் தியானம் செய்யும் நிலையில் கருவறையில் காட்சி தருகிறார். கண்ணனின் தந்தை வசுதேவருக்கும் இங்கு சிலை உள்ளது. உத்தவர், குபேரன் ஆகியோர் உற்ஸவர்களாக உள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ளது பாண்டு என்னும் சிறு நகரம். மன்னன் பாண்டுவின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா பாய்கிறது. நதிவழிப் போக்குவரத்து இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. குன்றுகளும் நதியுமாகக் காட்சிதரும் இந்த இடம் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு பெரும் வரம்.