பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
04:04
கண்ணுார் : ஹிந்துக்கள் தவிர, மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை என, கேரளாவில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கண்ணுார் மாவட்டத்தில், மல்லியோடு பலாட்டு காவு என்ற கோவில் உள்ளது. இக்கோவிலில், மலையாள புத்தாண்டான, விஷு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ௧௪ம் தேதி முதல் நேற்று வரை, இக்கோவிலில் விஷு கொண்டாட்டம் நடந்தது. ஆனால், கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பலகையில், ஹிந்துக்களை தவிர, வேறு யாரும் கோவிலுக்குள் செல்ல கூடாது என எழுதப்பட்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடந்த ஆண்டும், விஷு கொண்டாட்டத்தின் போது, இதேபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது என, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.