பதிவு செய்த நாள்
22
ஏப்
2022
08:04
பொன்னேரி: பொன்னேரி, திருவாயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, இம்மாதம், 16ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் காலையில், நாச்சியார் திருக்கோவில், மாலை, ஊஞ்சல் சேவை ஆகிய உற்சவங்கள் நடந்தன.பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் சந்திப்பு திருவிழா, நேற்று முன்தினம், நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கியது.கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், தேரடியில் நிலை கொண்டார். மறுமுனையில் பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் வந்த அகத்தீஸ்வரர் காட்சியளித்தார்.ஆனந்தவல்லி தாயார், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியன் ஆகியோர் தனித்தனி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீற்றிருந்தனர். வாண வேடிக்கைகள் விண்ணை பிளந்தன.அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள், மாலைகள் மங்கள இசையுடன் மாற்றப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன.பின், நேற்று, அதிகாலை 5:45 மணிக்கு, அகத்தீஸ்வரர், கரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர், ஒரே சமயத்தில் எழுந்தருளினர். பஜார் வீதி கோதண்ட ராமன் சன்னதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் அரி - அரன் சந்தித்தனர்.அரியும், அரனும் ஒரே இடத்தில் சந்தித்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணா என கோஷங்களை எழுப்பினர்.அகத்தீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும், கரிகிருஷ்ண பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சந்திப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஈஸ்வரனையும், பெருமாளையும் ஒரே இடத்தில் வழிபட்டு சென்றனர்.