பதிவு செய்த நாள்
22
ஏப்
2022
08:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், தேரோடும் வீதிகளில் அசைந்தாடி வந்தது, கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.திருக்கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பெண்கள், மஞ்சள் நீர், வேப்பிலை, தீர்த்தம் கொண்டு வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். தினமும், சிறப்பு அலங்காரத்தில், அம்பாள் காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், சீர்வரிசை பொருட்கள், மங்கள வாத்தியம், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சூலத்தேவரும், அம்மனும், தம்பதி சமேததராக, மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.நேற்று காலை, 6:45க்கு, சுவாமியுடன் அம்பாள், திருத்தேருக்கு எழுந்தருளினார். மூலவருக்கு நேற்று சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.தேரோட்டத்தை முன்னிட்டு, ஆண் ஒரு பாகம், பெண் ஒரு பாகம் என, சிவனும், அம்மனும் ஒருங்கே காட்சியளிக்கும், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தேரோட்டம் கோலாகலம்: திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஐந்து நிலை கோபுரம் அற்புதமாக தயார் செய்யப்பட்டு, பூ மாலைகளும். வாழை, இளநீர், நெல், கரும்பு, மாவிலை, வேப்பிலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.நேற்று மாலை, 4:15 மணிக்கு, திருத்தேரோட்டம் துவக்கியது. தேர் நிலையிலிருந்து, ஓம் சக்தி; மகா சக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பழநி ரோடு, தளி ரோடு, தலைகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை ரோடு, பொள்ளாச்சி ரோடு வழியாக, தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. தேருக்கு முன், மங்கள வாத்தியங்கள், சிங்காரி மேளம், தாரை, தப்பட்டை என பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க, பக்தர்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி உலா வந்தது. இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் லட்சக்கணக்கான பக்தர்கள், தேரோடும் வீதிகளின் இரு புறமும் காத்திருந்து, அம்மனை தரிசித்தனர். உடுமலையில், பாரம்பரியம், பண்பாட்டு, ஒற்றுமை என பல்வேறு அம்சங்களை கொண்ட தேர்த்திருவிழா, கடந்த இரு ஆண்டாக, கொரோனா தொற்று காரணமாக, நடக்கவில்லை. இதனால், நடப்பாண்டு திருவிழாவில், வழக்கத்தை விட, பல மடங்கு பக்தர்கள் பங்கேற்று, உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் தேர்த்திருவிழாவை கொண்டாடினர்.