பதிவு செய்த நாள்
23
ஏப்
2022 
04:04
 
 வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, வடபழனி முருகன் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், பழனி, திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கோவை மாவட்ட இணை ஆணையர் செந்தில் வேலவன், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்,"மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதலாக பிரசாதம் வழங்கப்படும்,"என்றார்.