வாழ்க்கை என்னும் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் பெரியவர் அவர். அவரது மனதில் கவலை குடிகொண்டிருந்தது. இதனால் எந்தவொரு செயலிலும் ஆர்வமில்லாமல் இருந்தார். இதை கவனித்து வந்த அவரது மனைவி இது குறித்து கேட்டார். அவரும் இதுதான் சமயம் என்று மடைதிறந்த வெள்ளமாக புலம்பலை திறந்து விட்டார். ‘‘ஏம்மா... நம்ம மகனுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது தவிர அனுபவமே இல்லை. நம்ம காலத்திற்கு பிறகு அவன் எப்படி வியாபாரத்தை கவனிக்க போகிறான் என்று தெரியவில்லை. எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கிறானே. இதுல அவனுடைய குழந்தைகள காப்பாத்தப்போறான்னு தெரியல’’ என கொட்டித்தீர்த்தார். அங்கே பேரமைதி நிலவியது. அந்த அமைதிற்குள் மெல்லியதான ஒரு குரல் வெளிப்பட்டது. ‘‘ஏங்கா.. நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே...’’ என்றாள் மனைவி. ‘‘இதுல என்னம்மா இருக்கு. உன் மனசுல பட்டத சொல்லு’’ என்றார் பெரியவர். ‘‘உங்களது அப்பா உங்ககிட்ட பொறுப்பை கொடுப்பதற்கு முன்னால், நீங்களும் இப்படித்தானே இருந்தீங்க. அவரிடம் நீங்கள் மாணவராக இருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டீர்கள். இப்போது ஆசிரியராக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மகன் கடைசி வரைக்கும் மாணவனாகவே வாழ்க்கையால் கழித்தால் எப்படி’’ என்ற கேள்வியை கேட்டார். ‘‘நீ சொல்ல வருவது எனக்கு புரியவில்லையே’’ என இழுத்தார் பெரியவர். ‘‘உங்களை நம்பி உங்களது அப்பா பொறுப்பை கொடுத்தார். அதனால் சிறந்த மனிதராக மாறினீர்கள். ஆனால் நீங்களோ பொறுப்பை உங்கள் மகனிடம் கொடுக்க பயப்படுகிறீர்கள். தொழிலாக இருந்தாலும் சரி.. வாழ்க்கையாக இருந்தாலும் சரி.. குறிப்பிட்ட வயதை தாண்டியதும் அடுத்து உள்ளவர்களுக்கு பொறுப்பை கொடுப்பதுதான் அமைதிக்கான வழி. வயதான காலத்தில் நீங்களே ஓடிக்கொண்டிருந்தால் எப்படி. இது நீங்கள் ஓடுகிற நேரமில்லை. உங்கள் மகன் ஓடுவதை உட்கார்ந்து ரசிக்க வேண்டிய வயது இது’’ என்றாள் மனைவி. பெரியவரின் மனம் லேசானது.