சென்னையில் வேதஸ்ரேணி என்று முன்பு அழைக்கப்பட்ட வேளச்சேரியில் திரவுபதிக்காக எழுப்பப்பட்டுள்ள கோயில் இருக்கும் சாலையே அதன் பெயரைத் தாங்கி நிற்கிறது - திரவுபதி அம்மன் கோவில் தெரு. வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரம் காலனியில் காந்தி சிலைக்கு எதிரே உள்ளது இந்தத் தெரு. காளியின் அவதாரமாக கருதப்படும் இவள் இப்பகுதியின் காவல் தெய்வம். சிலருக்கு குலதெய்வம். முக்கியமாக ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபடுகிறார்கள். 300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. கருவறையில் அம்மன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். தோளில் ஒரு கிளி உள்ளது. இப்போது கருவறை உள்ள இடத்தில்தான் அம்மனின் சிலை கண்டெடுக்கப்பட்டது. வராகி, விஷ்ணு துர்கை, பிராமி, வைஷ்ணவி, கவுரி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன. மண்டபத் துாண்களில் பஞ்ச பாண்டவர்கள், அனுமன், ராதாகிருஷ்ணரை தரிசிக்கலாம். சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா நடக்கிறது. இதில் தீமிதித் திருவிழா முக்கியமானது.