நசீம் அகமத் நன்றாக படிக்கும் மாணவன். உடல்நலக்குறைவால் படிக்காமல் தேர்விற்கு சென்றான். வினாத்தாளும் கொடுக்கப்பட்டது. உடனே புத்தகத்தில் கிழித்து எடுத்து வந்த பக்கத்தை பார்த்து விடை எழுத ஆரம்பித்தான். அதைப் பார்த்த ஆசிரியர், ‘‘டேய்... நீயா இது மாதிரியான செயலை செய்கிறாய். உன்மேல் வைத்திருந்த மதிப்பே போய்விட்டது. ஏன் இப்படி செய்தாய்’’ என கோபப்பட்டார். ‘‘சார். நேற்று எனக்கு காய்ச்சலாக இருந்ததால் படிக்க முடியவில்லை. இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை. அதிக மதிப்பெண் வாங்கவே இப்படி செய்தேன்’’ என்றான். ‘‘மதிப்பெண் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இந்த தேர்வு இல்லைன்னா என்ன. அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கலாம். அதற்காக உன்னை நீயே ஏமாற்றலாமா... படிப்பை விட ஒழுக்கம்தான் முக்கியம். படிப்பு இல்லையெனினும் ஒருவன் ஒழுக்கமாக இருந்தால், அதுவே உன்னைக் காப்பாற்றும்’’ என வருத்தப்பட்டார். ‘‘சார். என்னை மன்னித்துவிடுங்கள். இனி தவறு செய்யமாட்டேன்’’ என உறுதியளித்தான். அதுமட்டும் இல்லை. தான் கொண்டு வந்த பேப்பரை கிழித்ததுடன், முன்பு பார்த்து எழுதிய விடைகளையும் அடித்தான். தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதி தேர்ச்சி பெற்றான். அகமத் படிப்பில் முதல் ரேங்க் வாங்காவிட்டாலும் ஒழுக்கத்தில் முதல் மதிப்பெண் பெற்றான்.