சித்திரை அமாவாசை வழிபாடு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2022 05:05
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை முதல் ஏராளமானோர் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு வனத்துறையினின் பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனோ காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியது. வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மதியம் 12:00 மணி வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். கோயிலில் இரவு தங்குவதை தவிர்த்து, சுவாமி தரிசனம் செய்தவுடன் கீழே இறங்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.வனத்துறை , போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு பஸ் டிப்போவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.