திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2022 11:05
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாரப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா இன்று (05ம் தேதி) தொடங்கி 17ம் தேதி வரை 13 நாட்க்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, கொடி நான்கு முக்கிய வீதிகளின் மேளதாள வாத்திய கச்சேரியுடன் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு, கொடிகம்பத்திற்கு பால், சந்தனம் போன்ற திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து 09 ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
13 ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16ம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகiயுடன் வெட்டிவேர்; பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. மறுநாள் 17ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.