பதிவு செய்த நாள்
28
ஜூலை
2012
11:07
சென்னிமலை: சென்னிமலை மலை மீது அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு, 300 குடம் பாலாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது.ஈரோடு மாவட்டம் சென்னிமலை மலை மீது முருகப்பெருமான், ஸ்ரீசுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இங்குதான் முருகப்பெருமான் திருபுகழை தந்த அருணகிரிநாதருக்கு படிக்காசு நல்கியது, புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு திருக்கோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படி வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்புகள் கொண்ட ஸ்தலமாகும். இங்கு ஆண்டு தோறும், ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 300 குடத்துடன், 45வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று காலை, 6.35 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் துவங்கி, மேள தாளத்துடன் திருவீதி வலம் வந்து மலைக் கோவிலை அடைந்தது. காலை, 11.40 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியர்க்கு பாலாபிஷேகம் துவங்கி, மதியம், 1.30 வரை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்துடன், மகாதீபாராதனையும், உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன், சங்க மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.