பதிவு செய்த நாள்
28
ஜூலை
2012
11:07
வள்ளியூர்: தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில் 127ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 127வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் திருப்பலியும், திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு புதிய தேரை பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார் அர்ச்சிக்க, பின் கோயிலை சுற்றி தேர்பவனி நடந்தது. மாலை 6.50 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இல்ல குருவானவர் சத்தியநேஷன் தலைமையில் குருக்கள் ஜெபித்து மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அர்ச்சித்தனர். பின்னர் கோயில் தர்மகர்த்தாவும், தெற்கு கள்ளிகுளம் பஞ்.,தலைவருமான ஆனந்தராஜா கொடிமரத்தில் மாதாவின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது உலகத்தில் சமாதானம் உண்டாவதற்காக சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நாளான 8ம் நாளான வரும் 3ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9ம் திருவிழாவான 4ம் தேதி இரவு கோட்டார் மறைமாவட்ட ஆயர் ரெமிஜூஸ் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, பாதுகாப்பு, குடிநீர், தங்குமிட வசதி கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார், உதவி பங்குதந்தை குழந்தைராஜன், கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.