பதிவு செய்த நாள்
12
மே
2022
05:05
மதுக்கரை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில், 200 ஆண்டுகட்கும் மேல் பழமையான மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில், மரப்பாலம் - செட்டிபாளையம் சாலையில், தனியார் கல்லூரி அருகேயுள்ள, 7.63 ஏக்கர் நிலமும் அடங்கும்.
இதனை கடந்த, 20 ஆண்டுகட்கும் மேலாக, மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்த, முத்துவேலப்பன், சாமிநாதன் சகோதரர்கள் குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர். இருவரையும் நிலத்தை ஒப்படைக்க கோவில் செயல் அலுவலர் மூன்றாண்டுகட்கு முன் அறிவுறுத்தினார். நிலத்தை ஒப்படைக்க மறுத்ததால், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில், மதுக்கரை வருவாய் ஆய்வாளர் ஜெயகவுசல்யா, வி.ஏ.ஓ., பாலதுரைசாமி, கோவில் செயல் அலுவலர் சரண்யா முன்னிலையில் நிலத்திலிருந்த வீடு, மாட்டு கொட்டகை பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாயாகும். காலை, 11:00 மணிக்கு துவங்கிய பணி மாலை, 3:30 மணிக்கு. முடிவுக்கு வந்தது. அளவு கற்கள் நடப்பட்டு, நிலம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. போலீஸ் எஸ். ஐ., குப்புராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோவிலுக்கு சொந்தமான மேலும் பல ஏக்கர் நிலங்கள், மிக குறைந்த குத்தகையில் பலரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவைகளையும் மீட்டு கோவில் வருவாயை அதிகரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.