பதிவு செய்த நாள்
13
மே
2022
09:05
அவிநாசி: இரண்டு ஆண்டுக்கு பின் நடந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை திருவிழா, கொரோனா ஊரடங்கால் இரு ஆண்டு தடைபட்ட நிலையில், இந்தாண்டு நடந்தது. இன்று தேரோட்டம் துவங்கியது; முன்கூட்டியே நிலை வந்தது. காலை, 8:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணிக்கு, குலாலர் மண்டபம் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. பொதுவாக, தேரை இழுக்க இரண்டு, புல்டோசர் பயன்படுத்தப்படுவது வழக்கம் இம்முறை, ஒரு புல்டோசர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், காலை, 8:30 மணிக்கு துவங்கி. 11:45 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலை வந்தது சேர்ந்தது; அப்போது, பக்தர்கள் கைத்தட்டி, ஆரவாரம் எழுப்பினர். பெரிய புராணம் சிவனடியார்கள் சார்பில், இசைக்கருவி மீட்கப்பட்டு, ரத வீதிகளில் கீர்த்தனம் இசைக்கபட்டது.
கடந்த நாட்களில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த இரு நாளாக, வெயில் தணிந்து, ஊட்டியை போன்று இதமான காலநிலை நிலவியது: இதனால், பக்தர்கள் வெயிலின் சுடுதல் இல்லாமல் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
அன்னதானம் தாராளம்: கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் மண்டபத்திலும், தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், மேற்கு ரத வீதி, பூவாசாமி திருமண மண்டபம்; அவிநாசியப்பர் அன்னதான குழு சார்பில், தேவாங்கர் மண்டபம்; சுந்தரமூர்த்தி நாயனார் அன்னதானக்குழு சார்பில், செங்குந்தர் மண்டபம்: ஸ்ரீகருணாம்பிகை அன்னதான குழு சார்பில், கங்கவர் மண்டபம், கோவம்சத்தார் அன்னதான அறக்கட்டளை சார்பில், கோவம்ச திருமண அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி பேரூராட்சி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் குடிநீர், நீர்மோர், பானகம், ஜூஸ் வழங்கப்பட்டது.
சபாஷ் பேரூராட்சி: அவிநாசி பேரூராட்சி சார்பில், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் டூவீலர் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டது. தேர் நிலை வந்த சேர்ந்த இடம், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் இருந்து நன்கு தெரியும் என்பதால், தேரை பார்க்க வந்த பக்தர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டனர்; பக்தர்களும், திருப்தியுடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேரில் இருந்த அம்மையப்பனை தரிசித்தனர்.
மின் வாரியத்தினர் உஷார் : தஞ்சையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தின் எதிரொலியாக, மின் வாரியத்தினர் வழக்கத்தை காட்டிலும், கூடுதல் கவனத்துடன் செயல்பட்டனர். தேரோடும் வீதிகளில் மின் இணைப்பு. துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்தனர்.