அன்னூர்: புளியம்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில், மழை வேண்டி பக்தர்கள் காளைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
பு.புளியம்பட்டியில், பிளேக் மாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, சித்திரை திருவிழா கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், காளைகளை இழுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டு மேளதாளம் முழங்க, மாதம்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. மாரியம்மன் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலை சுற்றி காளைகள் வலம் வந்தன. கம்பம் நடப்பட்ட இடத்தில் காளைகளை அவிழ்த்துவிட்டு, அங்கு நிறுத்தி வழிபாடு செய்தனர். காளையை வைத்து வழிபாடு செய்தால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே காளையை வைத்து இங்கு வழிபாடு செய்யப்பட்டது. பறை இசை நடனத்துடன் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.