சூலூர்: சித்தநாயக்கன்பாளையத்தில் இன்று தேரோட்ட விழா நடக்கிறது.
சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. செலக்கரச்சல் மற்றும் சித்தநாயக்கன் பாளையம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவில்களில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 3 ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் விழா துவங்கியது. அக்னி கம்பம் நடப்பட்டது, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. அம்மை அழைத்தல் உள்ளிட்ட பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூவோடு ஊர்வலம் இன்று நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, தேரோட்ட விழா நடக்கிறது. நேற்று தேர்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டது. தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.