போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்த லோகநாதபுரம் முதலியார் வீதியிலுள்ள சித்திவிநாயகர், காமாட்சியம்மன் கோவில். 40ம் ஆண்டு விழா கடந்த, 10ல் கொடி கட்டுதலுடன் துவங்கியது. மறுநாள் முதல், உதய காலம், உச்சி கால பூஜைகள், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அரண்மனை விளக்கு எடுத்தல், அம்மன் அழைத்தல், அணிக் கூடை எடுத்து வருதலும் நடந்தன. மேலும் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பின்தொடர, சக்தி கரக ஊர்வலம் குறிச்சி பொங்காளி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, மதியம் கோவிலை சென்றடைந்தது. மாலை மாவிளக்கு வழிபாடு, பொங்கல் பூஜை மற்றும் தீபாராதனை நடந்தன. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இன்று சக்தி கரக புஷ்பாஞ்சலி, மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கரகம் வீதி உலா வருதலும் நடக்கின்றன. நாளை அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், ஆராதனை மற்றும் உச்சிகால பூஜையுடன் விழா நிறைவடைகிறது.