பதிவு செய்த நாள்
19
மே
2022
01:05
சூலூர்: சூலூர் அத்தனூர் அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் மார்க்கெட் ரோட்டுக்கு அருகில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, 29 வது ஆண்டு திருக்கல்யாண திருவிழா, கடந்த, 3 ம்தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. மே 10 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன் தினம் இரவு பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து மேள, தாளத்துடன் சப்பரத்தில் அம்மனை அழைத்து வந்தனர். இதில், ஏராளமான பெண்கள், தீர்த்தக் குடங்கள், பால் குடங்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் திருக்கல்யாண திருவிழா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவீதி உலா நடக்கிறது. இதேபோல், சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் விழா நேற்று நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.