பரமக்குடி அருகே புதையுண்ட 13 ம் நூற்றாண்டு சிவன் கோயில் : தோண்டி எடுக்கும் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2022 03:05
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் புதையுண்ட நிலையில், தோண்டி எடுக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூர் கிராமத்தில் பட்டீஸ்வரமுடைய அய்யனார் திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயில் கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக உள்ளது. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜை பட்டியலில் கோயில் உள்ளது. ஆனால் கண்மாய் கரை அருகில் கிட்டத்தட்ட மண்ணில் புதையுண்டு கோயில் காணப்படுகிறது. மூலவர் பட்டீஸ்வரமுடைய அய்யனார் மற்றும் எதிரில் கோயில் வெளிப்பிரகாரத்தில் அற்புதமான நந்தி சிலை உள்ளது. இங்குள்ள சிதிலமடைந்த ஒவ்வொரு கல்லையும் தட்டும் போது ஒவ்வொரு இசையை கொடுக்கின்றன.
இதனையடுத்து கோயிலை புனரமைக்கும் நோக்கில் மாநில திருப்பணி ஆலோசனை குழு உத்தரவின் பேரில், சுவரைச் சுற்றி பள்ளம் தோண்டும் பணிகள் நேற்று நடந்தது. அப்போது தரைமட்டத்திலிருந்து 8 அடி வரை பள்ளத்தில் கோயில் மணலால் மூடப்பட்டது தெரியவந்தது. இப்பணியினை கோயில் ஆய்வாளர், தக்கார் முருகானந்தம் தலைமையில் நேற்று மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி பார்க்கப்பட்டது. வரும் நாட்களில் கோயிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மற்றும் ஆவணத்தில் உள்ள இதர நிலங்களையும் கண்டறிவதுடன், தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருப்பணிகள் துவக்கப்பட உள்ளது, என்றார். கோயில் பூசாரி மனோகரன் கூறியபோது: இத்திருக்கோயிலில் அன்னபூரணி உடனுறை பட்டீஸ்வரமுடையவர் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அம்பாள் சிலை தற்போது இல்லை. மேலும் இங்குள்ள விநாயகர் சிலையின் முதுகுப் புறத்தில் வராகி அம்மன் அருள்பாலிக்கிறார், என்றார்.