மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, 100 ஆண்டு பழமை வாய்ந்த, கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு தண்ணீர் தடம் பகுதியில், பவானி ஆற்றின் கரையில் ஒக்கலிகர் சமூக கொம்மேர் குலதெய்வ கொங்கலம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேக விழா, கடந்த வியாழன் அன்று பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கோவிலை சுத்தம் செய்தனர். நேற்று காலை மங்கள இசையுடன் வேள்வி கால பூஜைகள் நடந்தன. யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் வேள்வி பூஜைகளை செய்தனர். இவ்விழாவில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி, மாவட்ட தலைவர் தம்பு மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காணியப்ப கவுடர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.