அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர் கால நாணயங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 10:02
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் சந்தி பூஜை விழா நடந்தது.
இக்கோயில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவாக பாண்டியர்களின் செங்கோல், அரச முத்திரைகள், சின்னங்கள் வெளியிடப்பட்டன. கி.பி., 1180 முதல் 1480 கால கட்டத்தின் 50 பாண்டியர் கால நாணயங்கள் வரலாற்றுச் சான்றுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. பாண்டியர் பேரரசு சார்பில் விஜயநகர பேரரசின் சின்னம், ஒற்றுமையின் அடையாளமாக விஜயநகர பேரரசின் அரவிடு வம்சம் அனெகுந்தி சமஸ்தானத்தின் 19வது ராஜா கிருஷ்ணதேவராயருக்கு வழங்கப்பட்டது. விஜயநகர பேரரசு சார்பில் பாண்டியர்களின் மீன் சின்னம், பாண்டிய வம்சவளியினரும் முன்னாள் தமிழக தடய அறிவியல் துறை இயக்குனருமான விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணதேவராயர் கூறுகையில், ‘‘இக்கோயில் விஜயநகர பேரரசர் ராமராயர் காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது. கர்நாடக இசையின் பிதாமகர் புரந்தரதாசர் இத்தல தாயாருக்காக பாக்யத லட்சுமி பாரம்மா பாடல் பாடியுள்ளார்’’ என்றார். முன்னதாக பெருமாள் சன்னதியில் சுந்தர பாண்டியனை நினைவுகூரும் வகையில் சந்தி பூஜை நடந்தது. பாண்டியநாடு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.