சில சமயங்களில் பல நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. இதனால் நம் இதயம் வேகமாக துடிப்பதுகூட பிறருக்கு துல்லியமாக தெரிந்துவிடுகிறது. இது மாதிரி அடிக்கடி கோபப்படுபவர்தான் பஷீர். இவர் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு போக வேண்டும். ஆனால் எட்டு மணிக்குதான் எழுந்திருப்பார். இப்படித்தான் ஒருநாள் எழுந்தவர் அவசரமாக பாத்ரூமுக்கு ஓடுகிறார். கதவு சாத்தியிருந்தது. உள்ளே அவரது மகன். கடிகாரம் ஓடுவது போல் அவரது இதயமும் ஓடியது. ‘‘டேய்.. நான் குளிக்க போகும்போதுதான் நீயும் குளிக்க போவாயா... சீக்கிரம் வெளியே வா.. டைம் ஆச்சு’’ என திட்டுகிறார். மகன் வெளியே வந்ததும் உள்ளே சென்றார். அங்கே டூத் பிரஷ் இல்லை. டென்ஷன் சூடு பிடிக்கிறது. ஒரு வழியாக சமாளித்து குளித்து முடிக்கிறார். காலை உணவு சாப்பிடக்கூட நேரமில்லாமல், டூவீலரை எடுக்கிறார். அப்போது பார்த்து முன் பக்க டயர் பஞ்சராக இருந்தது. பிறகு என்ன செய்ய? ஆட்டோவை பிடித்து அலுவலகம் சென்றார். இவரைப் போலத்தான் பலரும் உள்ளோம். எதுவாக இருந்தாலும் முதலில் திட்டமிடுவது அவசியம். உதாரணமாக பத்து மணிக்கு அலுவலகம் என்றால்.. குளிக்க, சாப்பிட, பயணம் செய்ய என்று தனித்தனியாக நேரம் ஒதுக்குங்கள். அப்படி செய்தால் மனம் அமைதியாகும். பிறகு என்ன... மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.