நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவரின் பக்தர்களில் ஒருவர் நெய்வேலி மகாலிங்கம். இவரது நண்பர் மகனை காணவில்லை என்றும், அவன் நல்லபடியாக வர வேண்டும் என மஹாபெரியவரிடம் முறையிட வேண்டும் என்றும் வேண்டினார். பத்திரிகையில் விளம்பரமோ, காவல்துறையில் புகாரோ செய்யக் கூடாதா எனக் கேட்டார் மகாலிங்கம். ‘‘ஊருக்குள் விஷயம் தெரிந்தால் மானம் போகும் என்பதால் தங்களின் உதவியை நாடி வந்தேன்’’ என்றார். அந்த சமயத்தில் மகாராஷ்டிராவிலுள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். அங்கு சென்ற போது மூன்று நாட்களாக தியானத்தில் இருப்பதாகவும், அறையை விட்டு சுவாமிகள் வெளியே வரவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட நண்பர் வருத்தப்பட்டார். ஆனால் என்ன ஆச்சரியம்.... சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. தவப்பிழம்பாக காட்சியளித்தார். ‘‘சுவாமி... இவரது மகன் காணாமல் போய்விட்டான். தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்’’ என்றார். மகனின் புகைப்படத்தை பாதத்தில் வைத்த நண்பர் கண் கலங்கினார். அவரைப் பார்த்து கை உயர்த்தி, ‘‘ ஊருக்குப் புறப்படுங்கள். மகன்திரும்புவான். வந்ததும் மடத்திற்கு தகவல் அனுப்புங்கள்’’ என ஆசியளித்தார். ஓரிரு நாளிலேயே நண்பரின் மகன் வந்து சேர்ந்தான். மடத்திற்கு தகவல் அனுப்பினர். காணாமல் போனவன் எப்படி திரும்பி வந்தான்? தெரியுமா... சென்னை கல்லுாரி ஒன்றில் படிக்கும் மாணவன் அவன். மனஉளைச்சலால் ஊரை விட்டு ஓடிய அவன், கர்நாடகத்திலுள்ள மந்திராலயத்திற்குச் சென்றான். அங்கு ஒருநாள் துங்கபத்திரா நதியில் நீராடிய போது, ‘உடனடியாக ஊருக்குச் செல்’ என மனதிற்குள் யாரோ கட்டளையிடுவது போலிருந்தது. உடனடியாக நெய்வேலிக்கு புறப்பட்டான். அவனுக்கு வழிகாட்டியது யார் தெரியுமா? மஹாபெரியவர் தான். அவரிடம் வைக்கும் நம்பிக்கை வீண் போவதில்லை.