பதிவு செய்த நாள்
02
ஆக
2012
10:08
பேரையூர் : மதுரை மாவட்டம், பேரையூரில் முத்துக்குழி மாரியம்மன் கோவிலில் அரசு தடை விதித்ததால், 10 ஆண்டுகளுக்கு பின், குழந்தைகளை புதைக்காமல் குழி மாற்று திருவிழா நேற்று நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கோவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமானது. குழந்தைகள் நோயால் பாதிக்கப்படும் போதும், குழந்தை பாக்கியம் இல்லாத போதும், இந்த அம்மனை வேண்டினால், பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறினால், "நேர்த்திக் கடனாக குழந்தைகளை உயிருடன் குழிதோண்டி புதைத்து, சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுப்பர். இதற்கு, "குழிமாற்று விழா அல்லது "குழி மாற்றிக் கொடுக்கும் விழா எனப் பெயர். இவ்விழா, ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால், கொண்டாடுபவர்கள் கடும் விரதத்தை கடைபிடிக்கின்றனர். விழாக் காலமான, 10 நாட்களும் இவர்கள் இறைச்சி சாப்பிடு வதில்லை. சிகரெட் புகைப்பதில்லை. காலில் செருப்பு அணிவ தில்லை. சினிமா பார்க்கமாட்டார்கள்.
கடந்த, 2002ம் ஆண்டு நடந்த குழிமாற்று விழாவில், உயிருடன் குழந்தைகளை புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் எடுத்த செய்தி வெளியானது. விழாவில் அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் துரைராஜ் (அ.தி.மு.க.,) கலந்து கொண்டார். குழந்தைகளை உயிருடன் புதைப்பதை மனித உரிமை கமிஷன் கண்டித்தது. பலரும் இவ்விழாவை தடை செய்ய வற்புறுத்தினர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் கண்டனத்திற்கு ஆளானார். அவரது பதவி பறிபோனது.
அரசு தடை செய்துள்ளதால், 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தைகளை புதைக்காமல், நேற்று விழா நடந்தது. மஞ்சள் துணியால் உடம்பு முழுவதும் சுற்றப்பட்ட குழந்தைகளை தாய்மாமன் அல்லது மாமன்மார்கள் தங்கள் தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். மரபுக்காக மண்வெட்டியை கொண்டு வந்தனர்.
கோவிலின் முன் தரை மீது குழந்தைகளை சிறிது நேரம் படுக்க வைத்து பின் பூக்களை தூவினர். பின் மஞ்சள் துணியை நீக்கினர். இவ்வாறு ஏராளமான குழந்தைகளுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். 400 ஆண்டுகளாக இவ்விழா நடக்கிறது.