மண்பாண்டத் தொழிலாளியான குருவைநம்பி என்பவர் வீட்டில் ஏழுமலையான் சிலை இருந்தது. அவருக்கு மண்ணில் செய்த பூக்களால் அர்ச்சனை செய்து வந்தார். வீட்டில் விழுந்த மலர்கள், திருப்பதி கோயிலில் இருந்த ஏழுமலையான் முன்னாலும் விழுந்தன. இதைக் கண்ட அர்ச்சகர் அதிசயத்துடன், தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். விஷயமறிந்த மன்னர், குருவநம்பியைக் காண வந்தார். மண்மலர்கள் சுவாமி முன் விழக்காரணமாக இருந்த தன்னை மன்னர் தண்டித்து விடுவாரோ என பயந்த குருவநம்பி, கையிலிருந்த தண்டத்தால் தலையடித்துக் கொண்டு உயிர் துறந்தார். தொண்டைமானும் மனம் வருந்தி தன் உயிரையும் போக்கிக் கொள்ள முயன்றபோது, பெருமாள் காட்சி யளித்து குருவநம்பிக்கு உயிர் கொடுத்தார். திருப்பதிமலையில் அலிபிரி வழியாக மலைக்குச் செல்லும் சோபனமார்க்கத்தில் (மலைப்பாதை) குருவைநம்பி வாழ்ந்த குருவமண்டபம் இப்போதும் உள்ளது.