திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2022 09:05
மயிலாடுதுறை : திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. தருமபுர ஆதீன குருமகாசன்னிதானம் பங்கேற்றார்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. எமனை இறைவன் சம்ஹாரம் செய்ததால் இந்த கோயிலில் கால சம்கார மூர்த்தியாக விளங்குகிறார். அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும். அபிராமிபட்டருக்காக தை அமாவாசையில் பௌர்ணமியை தோன்றச் செய்த வரலாற்று சிறப்புமிக்க கோயில் ஆகும். கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன. 48ம் நாள் முடிவில் மண்டல பூஜை பூர்த்தி விழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோவிலில் கீழ கோபுரம் முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள், வில்வவனநாதர், முருகர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக ருத்ர வேத பாராயணம், ஜபம், திருமுறை பாராயணம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. யாக பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.