‘‘மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா... யாரையாவது பழிவாங்கத் துடிக்கிறீர்களா’’ என மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். அனைவரும் ‘ஆமாம்’ எனக் கத்தினர். ஒவ்வொருவரையும் அழைத்து, ‘‘எத்தனை நபர் மீது கோபங்கள் உள்ளன’’ எனக் கேட்டார். ஐந்து, பத்து என ஆளாளுக்கு அடுக்கி கொண்டே சென்றனர். ஆசிரியர் ஆளுக்கொரு பை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி வரவழைக்கப்பட்டது. எத்தனை நபர் மீது கோபமோ அத்தனை தக்காளிகளை எடுக்கும்படி ஆசிரியர் கூறினார். மாணவர்கள் அதைப் பெற்றதும், ‘‘தக்காளிகளை பைக்குள் வைத்திருங்கள். துாங்கும் போதும் பை உங்கள் அருகிலேயே இருக்கட்டும்’’ எனக் கட்டளையிட்டார். ஓரிரு நாளில் தக்காளிகள் அழுக ஆரம்பித்தன. துர்நாற்றத்துடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். பைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர். ‘‘ உங்கள் மனதில் தக்காளியைப் போல பகையும், பழி வாங்கும் குணமும் அழுகிக் கொண்டிருக்கின்றன. அதையும் சேர்த்து துாக்கி எறியுங்கள்’’ என்றார் ஆசிரியர். பையை வீசிய மாணவர்கள் மனதில் தெளிவு பிறந்தது.