திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்ப வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2022 03:06
திருப்புத்துார்: திருப்புத்துார் ‛ சீதளி’ எனப்படும் திருத்தளி குளத்தில் திருத்தளிநாதர் கோயில் புதிய தெப்பம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தெப்ப உத்ஸவத்திற்காக தேவஸ்தானம் மற்றும் மண்டகபடிதாரர்கள் கார்காத்த வெள்ளாளர்கள் சமூகத்தினர் ரூ 25 லட்சம் மதிப்பிலான மரத்திலான புதிய தெப்பத்தை வடிவமைத்திருந்தனர். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக குளத்தில் நீர் பெருகாததாலும், கொரோனா ஊரடங்காலும் தெப்பம் நடக்கவில்லை. தற்போது குளம் பெருகியுள்ளது. இன்று காலை 9:45 மணிக்கு கோயிலில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பஞ்சமூர்த்திகளுக்கு நடந்த தீபாராதனையை தரிசித்தார்.
தொடர்ந்து கோயிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளத்திற்கு வந்தார். அடுத்து தெப்பத்திற்குள் கலச பூஜை நடந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பொன்னம்பல அடிகள் தெப்ப வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து தெப்பம் சீதளக்குளத்தை ஒரு முறை வலம் வந்தது. சீராக தெப்பம் மிதந்து வலம் வந்ததை பக்தர்கள் தரிசித்தனர். வைகாசி விசாக விழா பத்தாம் திருநாளை முன்னிட்டு ஜூன் 12 இரவு 8:00 மணிக்கு திருத்தளி தீர்த்தத்தில் தெப்பம் மூன்று முறை வலம் வரும்.