கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே உள்ள கோ.அய்யாபட்டி சக்தி மாரியம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த மே 24 கும்பம் வைத்து சாமி சாட்டுதல் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மே 31 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபடுதல், அம்மன் அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க அம்மன் கோவில் வந்து குடியேறுதல் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், அழகு குத்துதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இன்று பக்தர்கள் ஆரவாரம் மற்றும் பக்தி கோஷத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் மஞ்சள் நீராட்டுதலுடன் பூஞ்சோலை செலுத்துதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக இவ்விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.