பதிவு செய்த நாள்
04
ஜூன்
2022
05:06
செந்துறை, நத்தம் அருகே குடகிபட்டி ஊராட்சி பழனிபட்டி சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. அவரைத் தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தக் குடங்கள் மற்றும் முளைப்பாரி அழைப்பு நடந்தது. பின் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்பம், கும்ப அலங்காரத்தை தொடர்ந்து சக்தி விநாயகருக்கு எந்திர நவரத்தின பஞ்சலோக பிரதிஷ்டை நடந்தது.
நேற்று 108 மூலிகை கோமம், மூலமந்திர மாலா மந்திர ஹோமம், வேத ஜப பாராயணம், பூர்ணாகுதி தீபாராதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் தீர்த்தக்குடம் கோவிலை சுற்றி வந்து கோவிலின் உச்சியில் கும்பத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமடித்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.